Live Webtelecast of LORD VITTAL & GODDESS RUKKUMAI....From Pandharpur, Maharashtra !

Sunday, December 2, 2018

கண்டதும் கற்றதும் 1

🙏🏾💐🌷🌸💞🕉🌻‼🌼

மலர்களே...மலர்களே !

🌻மெல்போர்ன் மலர்கள்🌼

என்னை எப்போதுமே கவர்பவைகள் மலர்கள்...

இயற்கையின் அத்தனை அம்சங்களையும்....
வண்ணம், வடிவம், அழகு, அமைப்பு என எல்லா விஷயங்களையும் பார்த்து பார்த்து தெய்வம் படைத்த பொக்கிஷங்கள்...

*வாசமுள்ள மலரோ, வாசமில்லா மலரோ...*
இறைவன் அழகாகவே படைத்துள்ளான்...*

நான் அக்டோபர் 2018ல் ஆஸ்திரேலியா சென்ற சமயத்தில், என்னை பெரிதும் கவர்ந்தவைகள் இயற்கையின் பல வண்ணங்களே...

*சிறிது சிறிதாக வளர்ந்து கொத்து கொத்தாய் பூக்கும் மலர்கள் கொள்ளை அழகு...*
_ஒற்றை மலரில் பல இதழ்கள் தனி அழகு..._
*குட்டிப்பூக்கள் குறையில்லா அழகு.*
_பெரிய பூக்கள் நிறைவான அழகு._

எங்கு எப்போது மலர்களைப் பார்த்தாலும், நினைவில் வருபவன் நம் பீமனே..

*ஒரு முறை அர்ஜுனனுக்கு தான் பெரிய க்ருஷ்ண பக்தன் என்ற அகம்பாவம் வந்துவிட்டது. உடனே கண்ணன் அவனை நடக்கலாம் வா என்று அழைத்துச்சென்றானாம்.*

அப்போது வழியின் இருபுறமும் மலை மலையாய் பூக்கள் இருந்தனவாம். உடனே அர்ச்சுனன் "என்ன கண்ணா ! இத்தனை பூக்கள் ?! யாருக்காக யார் தந்தது" என்றானாம்..

*உடனே கண்ணன் என் ப்ரிய பக்தன் எனக்கு தினமும் சமர்ப்பிக்கும் பூக்களின் சிறு கூட்டம் இது என்றான்..*

உடனே அர்ச்சுனன் யாரது இத்தனை பூக்களால் உனக்கு அர்ச்சனை செய்வது என்று அதிர்ந்தான். அப்போது கண்ணன் சொன்ன பதிலில் அர்ச்சுனனுக்கு மயக்கமே வந்தது. கண்ணன் சொன்ன அந்த பக்தன் பீமன் என்பதால் தான் அர்ச்சுனனுக்கு மயக்கமே...

அர்ச்சுனன் கேட்டான் "கண்ணா...பீமன் உட்கார்ந்து நிறைய நேரம் சாப்பிட்டுதான் பார்த்திருக்கேனே ஒழிய, இத்தனை பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்ததை கண்டதேயில்லை என்று நொந்துபோய் சொன்னான்.

*அப்போது கண்ணன் கண்களின் ஓரத்தில் சிறு கண்ணீர் துளிகளோடு..." பீமன் காலை எழுந்தவுடனே படுக்கையில் இருந்துகொண்டே 'க்ருஷ்ணா ! இன்று உலகில் பூத்த அத்தனை மலர்களும் உன் திருவடிகளுக்கு சமர்ப்பணம்' என்று சொல்லிவிடுவான். அவன் தந்த பூக்களை அவன் பார்த்ததே கிடையாது. ஆனால் அவன் தந்த பூக்களிலிருந்து கொஞ்சம் எடுத்து தான் எல்லோரும் எனக்கு தினமும் அர்ச்சனை செய்கிறார்கள் என்றான்.*

இந்த விஷயம் படித்ததுமுதல் எங்கு பூக்களைப் பார்த்தாலும், முதலில் பீமன் போலே எல்லாம் கண்ணனுக்கு அர்ப்பணம் என்று
தந்துவிடுவது எனக்குப் பிடித்த ஒன்று..

*அதில்லாமல் மலர்கள் எப்போதும் என்னிடம் சொல்பவை..*

1. "பார் ! என் வாழ்க்கை மிகச்சிறியது. ஆனாலும் நான் எல்லோருக்கும் ஆனந்தம் தருகிறேன் ! தேனி, மனிதர், பறவை, புழு, மிருகங்கள் என்று எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை...

2. வாழ்க்கை சிறிது நேரமோ சிறிது நாளோ. நான் துக்கப்படுவதில்லை. எத்தனை மலர்ச்சியாக இருக்கிறேன்.

3. யாரும் என்னை கவனிக்காவிடினும், நான் ஆனந்தமாகவே இருக்கிறேன்.

4. வாடும்வரை என் ஆனந்தம் மாறுவதில்லை.

5. கடைசிவரை நான் இயல்பை யாருக்காகவும் மாற்றிக்கொள்ளவதில்லை. என் ஆனந்தத்தை யாரும் அபகரிக்கமுடியாது.

இவையனைத்தும் எனக்கு மலர்கள் சொல்லித்தந்த பாடங்களில் சிலவே..

இந்த மலர்களை மெல்போர்ன் நகரில் ரசித்தபோது, படம் எடுத்தபோது இதை நினைத்துக்கொண்டே தான் எடுத்தேன்.
கையால் பறிக்கவில்லை...
கண்ணால் பார்த்தேன்.
மொபைலில் படம் பிடித்தேன்.
மனதால் சமர்ப்பணம் செய்தேன்..

நீங்களும் இனி பீமன் போல் சமர்ப்பணம் செய்யவேண்டும் என்றுதானே நினைக்கிறீர்கள்.

*இனியாவது மலர்களைப்போல் ஆனந்தமாய் வாழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...*

©குருஜீ கோபாலவல்லிதாசர்
1/12/2018 - இரவு11.25

‼🙏🏾🕉💞🌸🌷💐🌺🌻

Wednesday, November 28, 2018

கொஞ்சம் பூவும், நிறைஞ்ச மனசும்

💞🙌🏽🕉🙏🏾✨👣🌸🌷💐

*கொஞ்சம் பூவும், நிறைஞ்ச மனசும் !!!*

சில சமயங்களில் தெய்வத்தின் அருளை நாம் மனிதர்கள் மூலமாக புரிந்து கொள்கிறோம் !

#ராதேக்ருஷ்ணா

*நெகிழ வைத்தவர்கள் - 1*

நானும் என் மனைவியும் Akila Balasubramanian நவம்பர் 25ம் தேதி பண்ருட்டிக்கு ஒரு கல்யாணத்திற்க்கு போயிருந்தோம்.

அப்போது #சரநாராயண #பெருமாள் சன்னிதிக்கு போயிருந்தோம். அங்கே வாசலில் இந்த இரண்டு வயதான அம்மாக்கள் பூ விற்றுக்கொண்டிருந்தார்கள்.

எப்போதுமே இது போல் உழைப்பவர்களைக் கண்டால் ஒரு தனி அன்பு, மரியாதை, எனக்கு வரும்.

*இவர்கள் போன்றவர்களிடம் நான் பேரம் பேசுவது கிடையாது. #உண்மையாய் #உழைக்கிறார்கள். கார் பங்களா என்று சொத்து சேர்த்து ஆடம்பர வாழ்க்கை வாழ உழைப்பவர்கள் அல்ல இவர்கள். #வயிற்றுப் #பிழைப்பாகவும், தங்கள் குடும்பத்திற்கு பண உதவியாய் இருக்கவே உழைக்கிறார்கள். வயதான காலத்தில் அக்கடா என்று இல்லாமல், தன்னால் முடிந்ததை செய்து #பெண்டு #பிள்ளைகளுக்கு #உதவியாக இருக்கிறார்கள்.*

ஆசையாய் தெய்வத்திற்கு பூ தொடுத்துத் தருகிறார்கள். #இவர்கள் இங்கே #பூ #விற்பதால்தானே, நாம் #வாடாத #மலர்களை வாங்கி பெருமாளுக்கு #சாற்றமுடிகிறது. நாம் நம் வீட்டில் இருந்து கொண்டு சென்றால், நம் ஊர் வெய்யிலில் வாடிவிடுமே.

*அந்த ஊர் பெருமாளுக்கு எத்தனை முழம் வேண்டும், எத்தனை சன்னிதிகள் என்பதெல்லாம், இவர்களுக்குத் தானே நம்மைவிட நன்றாகத் தெரியும். அதனால் இவர்களிடம் வாங்குவதை நான் ஆனந்தமாக பாக்கியமாக கருதுகிறேன். இவர்கள் கோயிலைப் பற்றி, மூர்த்திகள் பற்றி சொல்வதே தனி அழகு.*

இடதுபுறம் ஒரு மூதாட்டியும் ,வலதுபுறம் ஒரு மூதாட்டியும் பூ விற்றுக்கொண்டிருந்தார்கள். இடதுபுறம் உள்ள மூதாட்டியிடமிருந்து நான் துளசி வாங்கிக்கொண்டு இருந்தபோது, என் மனைவியிடம் வலதுபுறம் உள்ள மூதாட்டியிடமிருந்து பூ வாங்கச்சொன்னேன். #இருவரிடமும் #வியாபாரம் செய்தால் இருவருக்குமே #ஆனந்தம் என்பதால் இப்படி செய்வதுண்டு.

சில நூறு ரூபாய்களுக்கு தனித்தனியாக இருவரிடமும் பூ வாங்கிக்கொண்டு 500ரூபாய் தனித்தனியாக இருவரிடமும் கொடுத்துவிட்டு மீதிப்பணத்தை தரிசனம் செய்துவிட்டு வாங்கிக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டு கோயிலுக்குச் சென்றோம்.

மீண்டும் வந்தவுடன் இருவரின் முகத்தில் அத்தனை சந்தோஷம். மீதி சில்லறை வாங்க சென்றோம். ரங்கநாதர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள். கூப்பிடு தூரம் என்று ஆசையாய் சொன்னர்கள். அத்தனை அழகான பழைய கோயில் என்றார்கள். இங்கேயே பூ வாங்கிச்செல்லுங்கள் என்றார்கள். சரி என்று இருவரிடமும் மீதி பணத்திற்கு ரங்கநாதர், ரங்கநாயகி எத்தனை முழம் வேண்டுமென்று கேட்டு வாங்கிக்கொண்டோம்.

அவர்கள் அப்போது சொன்னது... *சாமி பெருமாள் அருளால இன்னிக்கு நல்லா படியளந்தீங்க...மவராசன், மவராசி நல்லா இருங்க* நானும் என் மனைவியும் என் சிஷ்யனும் அசந்தேபோனோம். ஏனென்றால் பெருமாள் அருளை அவர்கள் உணர்ந்தது. எங்களையும் உணர வைத்தது. வாழ்வில் தெய்வம் நமக்கு எத்தனையோ நன்மைகள் செய்கிறது. ஆனால் நாமெல்லாம் என் முயற்சி, என் புத்திசாலித்தனம் என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு அலைகிறோம்.

*ஆனால் சில நூறு ரூபாய்க்கு பெருமாளின் அருளை உணர்ந்த அவர்களின் பக்தியும், உழைப்பும், ஆனந்தமும் என்னை மெய்சிலிர்க்கவைத்தது.* அவர்களின் ஆனந்தம் மனதில் அப்படியே பசுமையாய் நிற்க அரங்கனைக் காண ஆசையாய் காரில் ஏறினோம். அவர்களோடு ஒரு போட்டோ எடுக்க ஆசைவரவே மீண்டும் இறங்கி அவர்களிடம் கேட்டதற்கு வாயெல்லாம் பல்லாக சந்தோஷமாக ஒத்துக்கொண்டார்கள். நன்றியுடன் அந்த தாய்மார்களைப் பார்த்து திருப்தியோடு காரில் ஏறினோம். இருவரும் ஓடிவந்து கொஞ்சம் பூ கொடுத்தார்கள். நான் கேட்டேன் எதற்காக என்று ?!?

*அவர்கள் சொன்னார்கள் "பொண்ணு வெச்சுக்கட்டும் சாமி" என்று என் மனைவியை பார்த்தார்கள். இந்த அன்பிற்கு என்ன சொல்ல நாங்கள்?!? எதைத்தர?!?...*

ஆனந்தமாக நெகிழ்ச்சியோடு அவர்கள் தந்த பூவையும் ரங்கநாயகிக்கு ஆசையாய் சமர்ப்பித்து, அவள் பிரசாதமாக மீண்டும் பெற்று, தலையில் சூட்டிக் கொண்டாள் என் மனைவி...

*இவர்கள் போன்ற உன்னதமானவர்களே சனாதன தர்மத்தின் ஆணிவேர்கள்...*

சரநாராயண பெருமாள் பாக்கியம் பெற்றவர் ..

இன்னும் பலர் இப்படி பல ஊரில் சந்தித்திருக்கிறேன்... வளரும்...

©குருஜீ கோபாலவல்லிதாசர்
27/11/2018- மதியம்1.34

💞👣💐✨🙏🏾🌷🕉🕉🙌🏽